- June 22, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்.
அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பண்டாரத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து, அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத் தவிர வேறில்லை என்ற நிலையில் நடு இரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.
வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். உம்மைப் பார்த்தால் திருடுவதை தொழிலாகக் கொண்டவன் போல் இல்லை, எதற்காக இவ்வாறு செய்தீர்? என்றார். அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் “இவரல்லவா எனக்கு பொக்கிஷம். வேறு பொக்கிஷம் எதற்கு” என தன் பண்டாரத்தை திறந்து உங்களுக்கு எவ்வளவு நெல், பொன், பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். மற்ற அடியவர்களும் வேண்டியது பெற பறையறிவிப்பு செய்தார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.