- June 25, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார். பெருமானை வழிபட்டு அடியார்களோடு தேவாசிறிய மண்டபத்தில் கூடி சிவ நெறி தழைக்க பணிபுரிந்து வந்தார்.
ஒருநாள் மண்டபத்தில் எல்லோரும் பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆரூரர் இவர்களைத் தொந்திரவு பண்ணக்கூடாது என ஒதுங்கி இறைவனை வழிபடச் சென்றார். இந்த அடியவர்களுக்கு சேவை செய்யும் நாள் என்றோ என நினைத்தார். ஒரு அடியார் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போவதைக் கண்ட விறன் மிண்டர் அவர் யார் என்றார். இறைவன் ஒலையைக்காட்டி அடிமை கொண்ட ஆரூரர் என்றனர். யாரானல் என்ன. அடியார் திருக்கூட்டத்தை மதியாரை இக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். உடனே மற்றவர்கள் என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். அவர் புற்றிடம் கொண்டாருக்கு வேண்டியவர். அவர் தம்பிரான் தோழர் என்றனர். அப்படியானால் அந்த ஆண்டவரையும் இக்கூட்டத்திலிருந்து விலக்குகின்றேன் என முழக்க மிட்டார். ஆண்டனையே ஒதுக்கி வைத்த வீரத்திருத்தொண்டர் விறன்மிண்டர்.
அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே தில்லைவாழ் அந்தணர் என்றார்.
ஆரூரர் திருவொற்றியூரில் தொண்டு செய்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த சங்கிலியரை மணம் முடிக்க சிவன் தூது சென்றது விறன்மிண்டருக்கு மிகுந்த வெறுப்பை ஆரூரர்மேல் ஏற்பட வைத்தது. அது இறைவனின் திருவிளையாடல் என்பதை அறியவில்லை. ஆனால் ஆரூரர் திருவாரூரில் இருப்பதால் அவருக்கு திருவாரூர் என்றாலே ஒருவித கசப்புணர்வு கொண்டிருந்ததால் ஆரூரர் இருக்கும்வரை இம்மண்ணை மிதிக்கமாட்டேன் என சபதம் செய்து விறன்மிண்டர் சிறிதுகாலம் கலிக்காமர் விருந்தினராக பெருமங்கலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே சிவத்தொண்டு செய்து வந்தார்.
திருவாரூரைச் சேர்ந்த எந்த ஒரு சிவனடியாரோ தம்மிடம் அருளோ பொருளோ கேட்க வந்தால் அவரை பரசாயுதம் கொண்டு கொன்றுவிடுவது என்று முடிவு கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு உதவி செய்யும்போது வலது பக்கம் பரசாயுதமும் இடது பக்கம் விபூதியையும் இருக்க அமர்ந்து சிவனடியார்களை வரவேற்பார். பரசாயுதத்தையும் விபூதியையும் அவர் மனைவிதான் கொண்டுவந்து வைப்பார். விறன்மிண்டரின் தணியாத கோபத்தை நீக்க பெருமான் முடிவு செய்தார்.
சிவபெருமான் அடியாரைப்போல் வேடம் கொண்டு விறன்மிண்டரின் வீடு சென்றார். அவர் துணைவியார் அடியாரைப் பார்ந்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்க அடியவர் திருவாரூர் என்றார். அதைக்கேட்டதும் என் கணவருக்கு திருவாரூர் அடியார்களை பிடிக்காது. அவர்களை கொன்றுவிட பரசாயுதத்தை வலது பக்கத்திலும் விபூதியை இடது பக்கத்திலும் வைத்திருக்கின்றார். நீங்கள் ஊரை மாற்றிச் சொல்லுங்கள் என்றார். அன்னையே சிவனடியாராக இருந்து பொய் உரைப்பது இறைத்தொண்டிற்கு ஏற்றது அல்ல. நீங்கள் ஒரு புண்ணியம் செய்யுங்கள். பரசாயுதத்தை இடது பக்கமும் விபூதியை வலது பக்கமும் மாற்றி வையுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அந்த அம்மையாரும் அவ்வண்ணமே செய்தார்.
விறன்மிண்டரிடம் அடியார்வேடம் கொண்ட சிவன் வந்தபோது நீர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றீர் எனக் கேட்டபோது திருவாரூர் என்றதும் விறன்மிண்டருக்கு அளவில்லா கோபம் வந்தது. அவர் பரசாயுதத்தை வலதுபக்கம் எடுக்க முயற்சித்தார். அது கையில் கிடைக்காமல் போகவே குனிந்து அது எங்கே எனப் பார்த்தார். இதைப் பயன் படுத்தி இறைவன் ஒடத் தொடங்கினார். அதற்குள் இடப்பக்கமிருந்த பரசாயுதத்தை எடுத்துக் கொண்டு அடியவரை துரத்தத் தொடங்கினார். இருவரும் திருவாரூர் எல்லையைத் தாண்டியிருந்தனர்.
விறன்மிண்டர் திருவாரூர் எல்லை மண்ணை மிதித்ததும் ஓடிக்கொண்டிருந்த அடியவர் நின்றார். திரும்பிய அவர் விறன்மிண்டரைப் பார்த்து இது திருவாரூர் மண் என்று கூற திகைத்த மிண்டர் தவறு செய்த காலை வெட்டிக்கொண்டார். இறைவன் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டு அருள் புரிந்தார்.