- June 25, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அவர்தம் வழியில் தோன்றியவர் மெய்பொருளார். அவர் சிவ வேடம் தரித்தவர் யாவராயினும் அவர்தம் கருத்தின் வழி பணி செய்யும் பண்பு கொண்டவர். உலகப் பொருள்களெல்லாம் இன்றிருந்து நாளை அழியும் பொய்ப் பொருள்கள். இவ் அழிகின்ற பொய்ப் பொருள்களை பொருளாக கருதாமல் திருநீறும் கண்மணியுமே மெய்ப் பொருள் என கருத்துக் கொண்டவர். சிவ வேடம் தரித்தவர்களை அவர்கள் குற்றம் குறை காணாது அவர் சிவ வேடத்தை அன்புடன் போற்றி வந்தார்.
திருக்கோயிலில் நடைபெற வேண்டிய எல்லா விழாக்களையும் சிறப்புற நடத்தியும் அடியவர்க்கு வேண்டியன நல்கியும் வாழ்ந்து வந்தார். முத்தநாதன் என்ற சிற்றரசன் சேதி நாட்டை வெல்ல பலமுறைப் படையெடுத்து தோற்று விட்டான். போர்வழியில் வெல்ல முடியாது எனக்கருதி வஞ்சகவலை விரித்து மெய்ப்பொருளாரை வெற்றிபெற திட்டம் தீட்டி செயல் பட்டான். நடு நாட்டின் மன்னனின் சிவபக்தியை அறிந்து அந்த சிவவேடத்தினாலேயே மன்னரை வீழ்த்த முடிவு செய்தான்.
முத்தநாதன் தன் மேனியெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். சடைமுடியினை பொருத்திக் கொண்டான். கையிலே கத்திவைத்த ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மெய்ப்பொருளார் அரண்மணை நோக்கி சென்றான். சிவனடியார் என்றதால் அனைவரும் வழிபட்டு வழிவிட மன்னன் உறங்கும் எல்லைவர சென்றான். அங்கு மன்னரின் மெய்க்காப்பாளர் தத்தன் மன்னர் உறங்குகின்றார். தாங்கள் காண இதுவல்ல நேரம் என்பதைக் கேட்ட முத்தநாதன் கோபத்தால் சப்தமிட்டு தத்தனை மீறி உள்ளே நுழைந்து விட்டான். மன்னன் உறங்க அவர் துணைவி கால் பகுதியில் அமர்ந்திருந்தார். அடியவரைக்கண்ட துணைவியர் அரசரை எழுப்பிவிட மன்னர் அடியாரை வணங்கியபடி எழுந்தார்.
மங்களம் பெருக எனக் கூறிய அடியவரிடம் மன்னர் அவர் இங்கு எழுந்தருளிய காரணத்தைக் கேட்டார். மண்மேல் இல்லாத ஆகமநூல் இது என்றார். மெய்பொருளார் அந்த ஆகமத்தைப் படித்து கடைத்தேற அருள் புரிய வேண்டி அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி தான் பணிவுடன் தலைகுணிந்து உபதேசிக்க வேண்டினார். முத்தநாதன் இதுதான் சமயம் என்று புத்தகத்தைப் பிரித்து வாளை எடுத்து அவர் முதுகில் குத்தினான்.
தன்னை மீறி அடியார் உள்ளே சென்றதிலிருந்து கவனித்து வந்த தத்தன் தன் வாளை உறுவி முத்தநாதனை வெட்டப் பாய்ந்தான். ‘தத்தா நமர்’ என்று தடுத்த மன்னன் தரையில் நிலை குலைந்தான். தத்தா அவர் நம் உறவினர். நீ இவருக்கு எந்த துன்பமும் இல்லாமல் ஊர் எல்லையில் கொண்டு விடவேண்டும் அதுவே நீ எனக்கு செய்யும் உதவி ஆகும் என்றார். மன்னர் ஆணைப்படி ஊர் எல்லையில் முத்தநாதனை விட்டுவிட்டு தத்தன் திரும்பிவரும்வரை தன் உயிர் போகமல் வைத்திருந்தார் மெய்ப்பொருளார். என் கொள்கை வெற்றிபெறச் செய்த தத்தா நீ உயர்ந்த மேலோய் என்றார்.
தன் அரண்மணையில் உள்ள அரசியல் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து “பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்துய்ப்பீர்” எனக்கூறி தரையில் சாய்ந்தார். இறைவன் தோன்றி அருள் புரிந்தார்.