- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
திருவாரூருக்கு தெற்கே எழு கி,மீ, தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின் அந்தணர் குலத்தில் நமிநந்தி பிறந்தார். அந்த ஊர் மக்கள் சத்திய வாழ்வு வாழந்து வருபவர்கள். வேதநூல்களின் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பவர்கள். திருநீறே மெய்ப்பொருள் என்ற அறிவுடையவர்கள். நமிநந்தி நாளும் அருகில் உள்ள ஆரூர் சென்று புற்றிடங் கொண்டாரை வழிபட்டு வந்தார்.
ஒருநாள் ஆரூர் சென்ற நமிநந்தி புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு முடிந்ததும் மதிலுக்கு வெளியில் வந்தார். அங்குள்ள ஆரூர் அறநெறி கோவிலில் வணங்க நினைத்தார். கோவிலின் உள் சென்று பெருமானை வழிபட்டார். அப்போது விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்றாயிருக்கும் என நினைத்ததால் ஊருக்குச் சென்று நெய் கொண்டுவந்து விளக்கு எரிக்க முடியாது என்பதால் அருகிலுள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் அந்த வீட்டின் பெரியவர் உங்கள் சிவன் கையில் நெருப்பை ஏந்தி இருக்கும்போது விளக்குக்குப் பஞ்சம் ஆகிவிட்டதா, இங்கு நெய் இல்லை என்றார். அப்படி உனக்கு விளக்கு எரிக்க வேண்டு மென்றிருந்தால் தண்ணீர் ஊற்றி எரியும் என்று ஏளனம் செய்தார்.
அந்த ஏளனம் கேட்டு வருத்தத்துடன் குளக்கரை வந்தார். அப்போது வானில் ,அடிகளே கவலையை விடு, உன் திருவிளக்குப்பணி நிகழ நெய்தானே வேண்டும், குளத்தின் நீரை விட்டு விளக்கு எரிப்பாயாக’ என்று ஒலித்தது. நமிநந்து உள்ளம் மகிழ்ந்து குளத்தில் மூழ்கி நடுக் குளத்திலிருந்து நீர் கொண்டு விளக்கில் ஊற்றி எரித்தார். பெருமானின் அருள் கண்டு மகிழ்வுற்றார். உலகம் வியக்க அது சுடர்விட்டு எரிந்தது. ஏளனம் செய்த சமணர் வெட்கப் படும் படியாக விடியும் வரை விளக்கு எரித்தார், தினமும் இப்பணியைத் தொடர்ந்தார். “நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே” என நாவுக்கரசு பாடினார்.
திருவாருக்கு அருகில் உள்ள மணலியில் ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப்பெருமான் எழுந்தருள்வார். நமிநந்தியடிகளும் சென்று வழிபட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவியிடம் வெந்நீர் வை பல ஜாதியரும் வந்திருந்தனர், நான் குளித்துவிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்றார். அப்படியே திண்ணையில் படுத்துறங்கினார். கனவில் ‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்,’ என்றார் பெருமான். நமிநந்தி தான் செய்த பெருந்தவறை எண்ணி வருந்தினார், திருக்கோவிலுக்கு வந்தவர் யாராயிலும் அவர்கள் அடியார்கள் எனக் கருதவேண்டும் என உணர்ந்தார். குளிக்காமல் எழுந்து வழிபாடு செய்து மீண்டும் திருவாரூர் சென்றார்.
திருஆரூரில் பிறந்து வாழும் எல்லோரும் அடியார்களாகவும் ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சி கண்டார். எம்பெருமான் முன் வீழ்ந்து மன்னிக்க வேண்டினார். திருவாரூரையே இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டுகள் செய்தார், அங்கு பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்தது நமிநந்தியாரே, பலகாலம் தொண்டு செய்து இறைவன் அடிசேர்ந்தார்.