- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்- திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது நீலகண்டம் எனச் சொல்லித் திருவோடு வழங்குவது வழக்கம். தெய்வ நலமே சிறந்த நலம் என வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்வு இனிது நடைபெற்றது.
திடீரென்று நீலகண்டர் ஒரு பரத்தைபால் சென்று மீண்டார். வாழ்வில் புயல் மையம் கொண்டது. கணவன் மனைவி இருவருக்குமிடையே பெரும் தடைச் சுவர் ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை. ஆனால் நீலகண்டரின் பூசைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அலட்சியமில்லாமல் பாங்குடன் செய்தார். குறிப்பறிந்து பக்குவமாக செய்தார். ஆனால் உடலுறவுக்கு மட்டும் இசையவில்லை.
பிரச்சனை நாளுக்குநாள் நீண்டு கொண்டே போக அதை முடிவுக்கு கொண்டுவர நினைத்தார் நீலகண்டர். ஒரு நள்ளிரவு நேரம். கணவன் மனைவி இருவர் மட்டும். தனிமையைப் பயன்படுத்தி மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தார். எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை யாகையால் மனைவிதானே என்ற உரிமையில் பலவந்தமாக அணைக்க முற்பட்டார். அதுவரை அமைதிகாத்த அம்மையார் “எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்றார்.
திருநீலகண்டம் என்ற மந்திரச் சொல்லான இறைவன் நாமத்தைக் கேட்ட நீலகண்டர் இடி கேட்ட நாகம் போல் ஆகி மனைவி என்பதனை மறந்து இதுகாறும் காணாத ஒரு பெண்ணைப்போல் நோக்கினார். அம்மையே, இனி உங்களை மட்டுமல்ல பெண் குலத்தையே இனி என் உடலால் மட்டுமல்ல மனத்தாலும் தீண்டேன் என்றார்.
ஆண்டுகள் பல ஆயின. இருவரும் சத்ய வாழ்வு வாழ்ந்தனர். முதுமையை அடைந்தனர். பெருமான் இவர்களின் சத்திய வாழ்வினை உலகறியச் செய்ய நினைத்தான். நாடகம் நடத்த அடியவர் வடிவில் வந்து திரு நீலகண்டரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து இதை பாதுகாத்துவரும்படிக் கூறினார். இதுவரை ஓடு கொடுத்தவர் அடியவரின் வேண்டுகோளினை ஏற்று ஓட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல நினைத்தபோது அவ்வடியவர், நீலகண்டரே இது சாதாரண ஓடு இல்லை. இதில் போடும் பொருள்களை தூய்மை செய்யும் அற்புதமான ஓடு. கவனமாக பாதுகாக்க என்றார். அவ்வண்ணமே அதை மிகவும் பாதுகாப்பாக வீட்டில் வைத்தார்.
சிறிது காலத்திற்குப்பின் அவ்வடியவர் வந்து ஓட்டைத் திருப்பிக் கேட்க உள்ளே சென்றுபார்த்த நீலகண்டர் தான் வைத்த இடத்தில் அது இல்லாததால் குழம்பினார். வீடு முழுவதும் தேடி இல்லை என்றபின் அடியவரிடம் நீங்கள் கொடுத்த ஓட்டைக் காணவில்லை அதற்கு மாறாக வேறு ஓடு தருகிறேன் ஏன்றார். அப்படியென்றால் நான் கூறுவது உண்மை என உன் புதல்வன்மேல் சத்தியம் செய் என்றார் அடியார். ஐயா தாங்கள் சொல்லியவாறு உறுதி செய்ய எனக்கு புத்திரப் பாக்யமில்லை என்றார். அப்படியானால் உன் அன்பு மனைவியின் கையைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார். அடியவரே எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சபதத்தால் என் மனைவியை தீண்டி உடன் மூழ்க முடியாது. நான் வேண்டுமானால் தனியே மூழ்கி உறுதி செய்கிறேன் என்றார். இதை ஏற்காத அடியவர் வழக்கு மன்றம் சென்றார்.
அடியவர் தான் ஒடு கொடுத்தது. நீலகண்டர் அது காணாமற் போய்விட்டது என சொல்லியதால் மகன் அல்லது மனைவி உடன் சத்தியம் செய்யச் சொன்னது அதற்கு அவர் கூறும் காரணம் ஆகியவற்றைக் கூறினார். நடுவர்கள் நீலகண்டரின் வாக்கு மூலம் கேட்டனர். வைத்த இடத்திலிருந்து ஓடு காணாமற்போனது மாயமாய் உள்ளது என்ற நீலகண்டரிடம் நடுவர்கள் உன் மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்குவதுதான் முறை எனத் தீர்ப்பளித்தனர்.
அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும்போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர்.
‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.