- June 22, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
கும்பகோணத்தின் ஒரு பகுதியாகிய தாராசூரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகர் குலத்தில் அவதரித்தவர் வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சித்தத்தில் கொண்டிருந்த கொள்கைகள் இரண்டு. ஒன்று சிவன் சிந்தனையை சித்தத்தில் பதித்து வழிபாடு செய்வது. மற்றது சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து கீழுடை மற்றும் கோவணம் விரும்பியதை அளித்து வணங்கி மகிழ்வது.
பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். அப்படிக் கோவணமும் சீருடையும் அன்பர்களுக்குத் தந்து தொண்டு செய்துவரும் அமர் நீதியாருக்கு கோவணத்தின் பெருமைகாட்டி அருள்கொடுக்க எம்பெருமான் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மனத்திலும் முகமிக மலர்ந்து வரவேற்றார் அமர்நீதியார்.
ஐயா, நான் தெய்வத்தன்மை மிகுந்த காவிரியில் நீராடி வருகின்றேன். மழைவரினும் வரும் தண்டிலே உள்ள இந்த உலர்ந்த கோவணம் ஒன்றினை உம்மிடம் கொடுக்கின்றேன். கோவணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். நான் குளித்துவரும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்ட அமர்நீதியாரும் ஒப்புக்கொண்டார்.
அமர்நீதியார் அடியவர் முக்கியத்துவம் கொடுத்த கோவணத்தை மற்றவைகளிடையே வைக்காமல் தனியாக பத்திரமாக வைத்தார். இறைவன் கோவணத்தை போக்கிவிட்டு மழையையும் பொழிய வைத்தார். அடியவர் மழையில் நனைந்து வந்து, என் கோவணம் நீரில் மூழ்கியதாலும், தண்டில் இருந்த கோவணம் மழையாலும் நனைந்து விட்டது, நான் கொடுத்த கோவணத்தை தாருங்கள் எனக் கேட்டார். அமர்நீதியார் உள்ளே சென்று பார்த்தபோது வைத்த இடத்தில் அந்த கோவணம் இல்லை. பதறிவிட்டார். இந்த அதிசயம் என் வாழ்நாளில் கண்டதில்லை. தங்களுக்கு வேறு ஒரு கோவணம் புதியதாகத் தருகின்றேன் என்றார்.
அமர்நீதியாரே. உமது செயல் நன்றாக இருக்கின்றது! நல்ல கோவணம் தருகின்றேன் என்று பல நாளும் பலரைச் சொல்ல வைத்தது என்னுடையதை வைத்துக்கொள்ள நாடகமா? பழையதாக இருந்தாலும் பரவாயில்லை. என்னுடையதுதான் வேணும் என்றார். அமர்நீதியார் அடியவரே அதற்குப் பதிலாக பொன்னும் மணியும் தருகிறேன் என்றதையும் மறுத்து கோவணமே வேண்டும் என்றார் அடியவர். என்னிடம் காணாமற் மறைந்த கோவணத்தைக் கேட்டால் எப்படி. அதற்கு மாற்று சொல்லுங்கள் என்றார் அமர்நீதியார்.
நான் உடுத்தியிருக்கின்ற கோவணம் தவிர, உம்மிடத்திலே கொடுத்து நீர் தொலைத்த கோவணம் தவிர அதற்கு நிகரான தண்டிலே உள்ள இந்தக் கோவனத்திற்கு சமமான கோவணம் வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்த அமர்நீதியார் தன்னிடமிருந்த எல்லா கோவணத்தையும் வைத்தும் தராசு சமநிலை அடையவில்லை. அதிசயப்பட்ட நீதியார் தன்னிடமிருந்த பொன் பொருள் அனைத்தையும் வைத்தார். அப்போதும் தராசு சமநிலைக்கு வரவில்லை.
வேறுவழி தெரியாமல் அமர்நீதியார் அந்த தராசை மனைவி மகனுடன் வலம்வந்து நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய்யடியில் தவறு செய்யவில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க எனச் சொல்லி நல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்து ஓதி தராசில் ஏறி நின்றார். தராசு துலை நேர் நின்றது. இறைவன் உமையோடு காட்சிதந்து தம்முன் எப்போதும் தொழுதிருக்ககூடிய இன்ப பேற்றினை அருளினார்.