- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
பல்லவ குலத்தில் பிறந்தவர் கழற்சிங்கர். சிவன் திருவடியை அன்றி வேறு ஒன்றையும் அறிவில் குறிக்கோளாக கொள்ளாது நாட்டை செவ்வனே அரசு புரிந்து வந்தான். சிவனுடைய கருணையால் வடநாடு சென்று பகைத்து நின்ற வடபுல மன்னரை வென்று நவநிதிகளை கைப்பற்றி அதன் மூலம் அரனுக்கு ஆலயங்கள் திருப்பணிசெய்து நைமித்தங்கள் அமைத்து திருத்தொண்டு புரிந்து வந்தார்.
திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார். பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாரை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருக தரிசனம் செய்து வழிபட்டார். அவரின் மனைவி கோவிலை வலம் வந்து பெருமைகளை ரசித்துக் கொண்டிருந்தார். வழியில் இறைவனுக்கு மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தில் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்ததை கண்ட செருத்துனையர் என்ற அடியவர் அவரின் செயல் சிவ அபராதம் எனக்கருதி தன்னிடமுள்ள வாளினால் நுகர்ந்த மூக்கை அறுத்து விட்டார்.
உதிரம் பெருக சோர்ந்து தரையில் வீழ்ந்து அழுது கொண்டிருந்த துனைவியரைப் பார்த்து யார் இதனைச் செய்தது எனக் கேட்ட மன்னனிடம், அங்கிருந்த செருத்துனையர், அரசே, இவர் தம்பிரானுக்குடைய மலரை எடுத்து மோந்ததால் இக்கருமம் யானே புரிந்தேன் என்றார்.
இந்தக் குற்றத்திற்கு ஏற்றதண்டனையை செய்தீரில்லை என வாளை எடுத்து மலரை எடுத்த கையன்றோ முதல் குற்றவாளி எனக் கையை வெட்டினார். கை எடுத்திருக்காவிடில் நாசி நுகர்திருக்காது என்பது அவர் எண்ணம். அவளுக்கு இத்தண்டனைவழங்காவிடில் மறுபிறப்பில் இக்குற்றத்திற்காக ஆயிரம் மடங்கு பெரிய தண்டனையை அனுபவிப்பர் அதை தவிர்க்கவே மன்னன் தண்டனை அளித்தான் என்பர். அப்போது இறைவன் தியாகராசர் காட்சி கொடுத்து மன்னனின் மாண்பு பாராட்டி துணைவியரை முன்புபோல் அருள் செய்தார். தன் தொண்டினைத் தொடர்ந்து பல ஆண்டு புரிந்து இறையடி சேர்ந்தார்.