- June 22, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர். பொய், களவு, காமம், கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர்.
ஒருநாள் திங்களூர் வந்த அப்பரடிகள் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அப்பூதியடிகள் என்று தெரியவந்ததும் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார். அப்பூதியடிகள் யார் என்றார். எதிரில் வந்த அப்பூதியடிகள் அடிகளார் என நினைத்து வீழ்ந்து வணங்கி எழுந்தருளிய காரணம் கேட்டார். திருப்பழநாதனை வழிபட்டு வரும் வழியில் உம் தண்ணீர் பந்தல் பார்த்தோம். தாங்கள் புரியும் அறங்கள் கேட்டு உம்மைக் காண வந்தோம் என்றார். உங்கள் பெயரை எழுதாமல் வேறு ஒரு பெயர் எழுதக் காரணம் யாது என்றார்.
தவச்செல்வர் என வணங்கியவர் காதில் வேறு ஒருவர் என்பது பேரிடியாகக் கேட்டது. மிகுந்த வருத்தத்துடன் சமணர்களும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினை தம் தொண்டினாலே வென்ற பெயர் வேறு ஒரு பெயரா. அதுவே என் தாரக மந்திரம். அது எனக்கு முக்தி தரும் ஐந்தெழுத்து. எப்படி புரியாமல் சொன்னீர்கள் என்றார். கடலிலே மிதந்த பெருமான், அவரை தெரியாதா? நீர் என்ன சமணர் கூட்டத்தினரா, நீர் யார் என்றார்?.
அப்பூதியடிகளே, என்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணது அதிகைப் பெருமான் கொடுஞ்சூலையினால் ஆட் கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியோன் நான் என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ, மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார், எல்லோரையும் பெருமான் காலடியில் வீழச் செய்து வழிபட்டார். வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாத பூசை செய்தார். வீட்டில் அமுது உண்ண வேண்டினார்.
நாவுக்கரசர் அமுது செய்ய இசைந்தார், நல்ல சுவையான தூய அமுது தயாரானது. தன் மூத்த பிள்ளை திருநாவுக்கரசை வாழை இலை கொண்டுவரப் பணித்தார். நல்ல குருத்திலையைத் தேடி அறுக்கும்போது அங்கு குடியிருந்த நாகம் தீண்ட அடியவர் அமுது உண்பது தன்னால் காலதாமதம் ஆகக்கூடாது என்று ஓடிவந்து தாயினிடம் இலையைக் கொடுத்து காலடியில் வீழ்ந்தான். வீழ்ந்த மகனைப் பார்த்த தாயும் தந்தையும் நீலம்பாய்ந்த உடலைக் கண்டு உண்மையறிந்து, அதனால் அடியவர் அமுது செய்வது தடைபடக்கூடாது என்று மகனை ஒரு பாயில் சுற்றி கட்டி வைத்துவிட்டு நாவுக்கரசர் திருவடியில் வீழ்ந்து அமுது செய்ய அழைத்தனர்.
வணங்கியவருக்கு திருநீறு கொடுத்துவிட்டு மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனுக்கும் திருநீறு பூச வேண்டும் என்றார். தன் குருமுன் சென்று உண்மையை உரைத்தால் அவர் அமுது செய்வது தடைப்படும் என்று அப்பூதியடிகள், ‘இப்போது அவன் இங்கு உதவான்’ என்றார். இந்த பதிலை என் உள்ளம் ஏற்கவில்லை. அவன் எங்கே என்றார். இனி மறுக்க இயலாமல் உண்மையை உரைக்க, பாயில் இருக்கும் பாலகனை கொண்டுவரச் சொல்லி, நீலகண்டன் அருள் தரும் படியான பத்து பாடல்களைப் பாட பாலகன் உறங்கி எழுபவன் போல் எழுந்தான். அவனுக்கு திருநீறு வழங்கினார் அப்பரடிகள்.
அனைவரும் அமர்ந்து அமுது உண்டனர். பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார்.