- June 22, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
அமராவதியாற்றின் கரையில் உள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர். அங்குள்ள ஆநிலைக் கோவிலின் பசுபதீசுவரரை நாளும் மூன்று முறை வணங்கி வந்தார். இத்தலப்பெருமானை வழிபடின் மீண்டும் ஒரு கருவில் பிறக்க வாய்ப்பு ஏற்படாது. எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார்.
அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற அடியர் வைகறைப்பொழுது எழுந்திருந்து நீரில் மூழ்கி குளித்து திருநீறு அணிந்து வாயினைக் கட்டி நந்தவனத்தில் மலர் பறித்து ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு மலர்களை மாலையாக்கி தினமும் இறைவனுக்குச் சூட்டி மகிழ்வார். ஒருநாள் அப்படி அவர் துய்மையுடன் மாலையை இறைவனுக்குச் சூட்ட எடுத்து வரும்போது மன்னனுக்கு பிரியமான பட்டத்துயாணை பட்டவர்த்தனத்துக்கு மதம் பிடித்து ஓடிவந்து சிவகாமி ஆண்டாரின் கையிலிருந்த மாலையை வீசி எறிந்து நாசம் செய்தது. பூக்கள் புழுதியில் பட்டு நாசமாயின. தன் மலர்த் தொண்டுக்கு ஏற்பட்ட சோதனை கண்டு கதறினார். தரையின் மீது விழுந்து ‘சிவதா சிவதா’ என அழுது பெருமானிடம் முறையிட்டார்,
அப்போது அங்கு வந்த எறிபத்தர் சிவகாமி ஆண்டவரின் முறையீட்டைக் கேள்விபட்டு கோபத்தினால் கொதித்து எழுந்தார். எம் அடியார்க்கு இவ்யானை பகையா எனக் கூறி யானை சென்ற வழியில் சென்று அந்த மதம் பிடித்த யானையின் துதிக்கையை வெட்டினார். பாகர்களையும் வெட்டினார்.
கேள்விப் பட்ட மன்னர் யானையை வெட்டிய பகைவரை எதிர்பார்த்து அவ்விடத்தே அடியார் ஒருவர் இருப்பதைக் கண்டார். நடந்தவற்றை அறிந்தார். சிவபக்தி மிக்க மன்னன் அடியவரே சிவத் தொண்டுக்கு இடையூறு செய்த யானையும் பாகனையும் வெட்டியது சரி. இவற்றை சரியாக நிர்வகிக்காத தானும் குற்றவாளியே, என்னை தாங்கள் என் வாளினால் தண்டியுங்கள் எனத் தன் வாளினை எடுத்து தந்தான்.
எறிபத்தர் புகழ்ச்சோழரின் பக்தியைக் கண்டு என்னால் இவ்வடியவரின் மனம் எவ்வளவு புண்பட்டு விட்டதே. நான் இருப்பதில் பயன் இல்லையென்று தன்னை வெட்டிக்கொள்ள முயன்றார். புகழ்ச் சோழர் பதறிப்போய் தடுத்தார். வானிலிருந்து ‘அன்பர்களே உங்கள் இருவரது அன்பினையும் உலகறியச்செய்யவே நாம் இவ்வாறு செய்தோம்’ என்று ஒலித்தது. யானையும் பாகரும் உயிர் பெற்றனர். சிவகாமி தொண்டர் மலர் தொண்டினை தொடர்ந்து செய்து வந்தார். எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகணத் தலைவராக ஆனார்.