

உ
ஸ்ரீ வரசித்திவிநாயகர் துணை
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் …… வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து …… குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த …… அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த …… பெருமாளே.
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு …… செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக …… துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை …… வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய …… அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் …… பெருமாளே.
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் …… கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் …… சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் …… கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் …… தம்பிரானே.
அபகார நிந்தைபட் …… டுழலாதே அறியாத வஞ்சரைக் …… குறியாதே
உபதேச மந்திரப் …… பொருளாலே உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ
இபமாமு கன்தனக் …… கிளையோனே இமவான்ம டந்தையுத் …… தமிபாலா
ஜெபமாலை தந்தசற் …… குருநாதா திருவாவி னன்குடிப் …… பெருமாளே.
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து …… துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க …… வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த …… கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன …… தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை …… தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும …… டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி …… அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக …… தம்பிரானே.
காமியத் தழுந்தி …… யிளையாதே காலர்கைப் படிந்து …… மடியாதே
ஓமெழுத் திலன்பு …… மிகவூறி ஓவியத் திலந்த …… மருள்வாயே
தூமமெய்க் கணிந்த …… சுகலீலா சூரனைக் கடிந்த …… கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த …… மயில்வீரா ஏரகத் தமர்ந்த …… பெருமாளே.
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன …… தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் …… மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு …… பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் …… வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் …… புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை …… உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ …… மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.
சந்ததம் பந்தத் …… தொடராலே சஞ்சலந் துஞ்சித் …… திரியாதே
கந்தனென் றென்றுற் …… றுனைநாளும் கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் …… புணர்வோனே சங்கரன் பங்கிற் …… சிவைபாலா
செந்திலங் கண்டிக் …… கதிர்வேலா தென்பரங் குன்றிற் …… பெருமாளே.
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம …… அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம …… ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம …… உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம …… அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ ரெவர்களு மீடேற ஏழ்கடல் …… முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் …… விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும் வசுவெனு மாகார ஈசனு …… மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர வனசர ராதார மாகிய …… பெருமாளே.